76th Independence Day Speech in Tamil
76-வது சுதந்திர தினம் பேச்சு போட்டி கட்டுரை
76th Independence Day Speech in Tamil
அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள் தெரிவிப்பதோடு, நான் வாழ்கின்ற இந்திய நாட்டிற்கும் நான் பிறந்த தமிழ் மண்ணிற்கும் நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்து எனது உரையை நான் தொடங்குகிறேன்.
ஆங்கிலேயர் ஆதிக்கத்தில் 200 ஆண்டுகள் அடிமை தலையில் இருந்த நம் பாரத நாடு விடுதலை அடைந்ததாக கற்பனையில் கண்டு மகிழுந்து, “ஆடுவோமே! பள்ளி பாடுவோமே! ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்!” என மகாகவி பாரதியார் பாடினார். ஆனால் பாரத நாடு சுதந்திரம் அடைவதை காண்பதற்கு கால் நூற்றாண்டு காலத்திற்கு முன்பாகவே இயற்கையோடு கலந்துவிட்டார் யாருக்கும் தலைவணங்காத அந்த மகாகவி.
இந்தியா எனப்படுகின்ற இந்த பாரத நாடு சுதந்திரம் அடைந்து 76 ஆண்டுகள் கடந்து ஓடிவிட்டது. இத்தனை ஆண்டு காலங்களில் ஒவ்வொரு வருடமும் சுதந்திர தின விழா என்பது நாடு முழுவதும் இருக்கின்ற அரசு அலுவலகங்கள், பள்ளி கல்லூரிகளில் கொண்டாடப்பட்டாலும் இன்றைய தலைமுறை பிள்ளைகளை பொறுத்தவரை அது ஒரு தேசியக்கொடியேற்றுகின்ற சம்பிரதாய விழாவாக மாறிக்கொண்டு வருகிறது. இந்த சுதந்திரம் சுலபத்தில் கிடைத்துவிட்டதாக கருதுகின்ற மனோநிலை நம் நாட்டின் தற்போதைய தலைமுறையினர் பலரிடமும் உள்ளன.
இந்த சுதந்திரம் என்பது உண்மையில் நமக்கு எளிதாக கிடைத்துவிட்டதா என்றால் நிச்சயம் கிடையாது. இன்றைய நம் தலைமுறையினர் நன்றாக வாழ வேண்டும் என கருதி, நமக்கு பல தலைமுறைகளுக்கு முன்பாக இருந்த நம் முன்னோர்கள் சிந்தித்து, இந்த நாடு அந்நியர்கள் ஆதிக்கத்திலிருந்தும், அவர்களின் சுரண்டலிலிருந்தும் விடுதலைப் பெற வேண்டும் எனும் உயரிய லட்சியத்தை கொண்டு, தங்கள் உடல், பொருள், ஆவி என அனைத்தையும் இந்த நாட்டின் விடுதலைக்காக தியாகம் செய்து, நமக்கு பெற்று கொடுத்தது தான் இப்போது நமது நாட்டு மக்கள் அனுபவிக்கின்ற சுதந்திரம் ஆகும்.
அடிமைப்பட்டது எப்படி?
பழங்காலம் முதலே நம் பாரத நாடு செல்வவளம் மிகுந்த ஒரு நாடாக உலகெங்கிலும் அறியப்பட்டிருந்தது. அதேபோன்று பாரத நாட்டின் ஆன்மீக மற்றும் தத்துவவியல் சிந்தனைகள், உலகம் முழுவதும் இருந்த பல அறிஞர்களையும், தேடல்கள் கொண்டவர்களையும் பாரதத்தை நோக்கி ஈர்த்தன. அக்காலத்தில் பாரத நாடு அறிவாற்றலிலும், பொருளாதார வளத்திலும் வலிமை பொருந்திய நாடாக இருந்த காரணத்தால், நம் நாட்டின் மீது படையெடுத்து வந்த பல வெளிநாட்டு படையெடுப்பாளர்களை சுலபத்தில் இந்திய நாட்டினர் தோற்கடித்து விரட்டினர்.
எனினும் கடந்த 500 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி ஐரோப்பிய கண்டத்தின் பல நாட்டின் வியாபாரிகள் பாரத நாட்டுடன் வணிகம் செய்வதற்கு கப்பல்களில் வர தொடங்கினர். முதலில் நம் நாட்டுடன் வாணிபம் மட்டுமே செய்த அந்த அந்நியர்கள், நம் நாட்டில் இருக்கின்ற இன, மத, குல, மொழி அடிப்படைகளில் இருக்கின்ற பிரிவினைகளையும், அதனால் இந்த நாட்டில் ஒற்றுமை இன்மை இல்லை என்பதையும் தெளிவாக உணர்ந்த அந்த அந்நியர்கள், நம் நாட்டை தங்களின் தந்திரமிக்க சதி செயல்களின் மூலம் சிறிது சிறிதாக பிடித்து, பிறகு ஒட்டுமொத்த பாரத நாட்டையும் தங்களின் காலணியாதிக்க அடிமை நாடாக மாற்றினர்.
தங்களின் அடிமை நாடாக பாரதத்தை மாற்றிய பிறகு, அந்த அன்னியர்கள் சிறிது சிறிதாக தங்களின் சட்டங்கள், கலாச்சாரங்கள், பழக்க வழக்கங்களை இந்த நாட்டு மக்களின் மீது வலுக்கட்டாயமாக திணித்தனர். அத்தோடு இந்த நாட்டின் இயற்கை வளங்களை சுரண்டி தங்களது சொந்த நாடுகளை வளம் கொழித்த நாடாக மாற்றினர். இதன் காரணமாக ஒரு காலத்தில் செல்வந்த நாடாக இருந்த பாரதம் ஒரு நூற்றாண்டு காலத்திற்குள்ளாகவே வறுமை, பஞ்சம், பசி, நோய்கள் நிறைந்த ஒரு ஏழை நாடாக மாறியது.
சுதந்திர போராட்டம்
நமது பாரத நாட்டின் மீதும், நாட்டு மக்களின் மீதும் தீராத பற்றும் அன்பும் கொண்ட தேசப்பற்றாளர்கள் பலர் இந்த கொடுமைகளை கண்டு மனம் நொந்தனர். பரதநாட்டின் இத்தகைய அவல நிலையை போக்க அன்னியர்களை விரட்டி, அவர்களிடமிருந்து பாரத நாடு சுதந்திரம் பெறுவது தான் ஒரே தீர்வு என்கிற முடிவிற்கு வந்தனர். அந்த வகையில் நமது தமிழ்நாட்டில் நெற்கட்டுஞ்செவல் பகுதியை ஆண்ட பூலித்தேவர் தொடங்கி, ஜான்சி ராணி, பகத்சிங், சுபாஷ் சந்திரபோஸ் போன்ற எண்ணற்ற விடுதலைப் போராளிகள் ஆயுத போராட்டம் மூலம் அன்னியர்களை இந்த நாட்டை விட்டு வெளியேற்ற அரும்பாடு பட்டனர்.
அகிம்சை வழியில் காந்தி
ஆயுதங்கள் இல்லாமல் அகிம்சையால் மட்டுமே அனைத்தையும் வெல்ல முடியும் என்கிற கொள்கையுடன் மகாத்மா காந்தி, திருப்பூர் குமரன், லாலா லஜபதி ராய், பெருந்தலைவர் காமராஜர் போன்ற தலைவர்கள் இந்திய நாடு சுதந்திரம் பெற பல போராட்டங்களை முன்னெடுத்து நடத்தினர். ஆயுதப் போராட்டம் நடத்தியவர்கள், அகிம்சை போராட்டம் நடத்துபவர்கள் என்கிற பேதங்களின்றி அனைத்து சுதந்திர போராட்ட வீரர்களையும் அப்போதைய அந்நிய நாட்டு அரசாங்கம் சிறையில் அடைத்து பல துன்புறுத்தல்களை செய்தது. ஒரு சிலரை பல சதிச்செயல்கள் செய்ததாக ஆதாரங்களின்றி குற்றஞ்சாட்டி தூக்கிலிட்டு கொன்றது.
இப்படி பல்லாண்டுக்காலம் அந்நியர்களின் கொடுங்கோல் ஆட்சியால் எண்ணற்ற துன்பங்களை அனுபவித்த அக்காலத்திய பாரத நாட்டு மக்கள் இன, மொழி, நிற, பேதங்களின்றி, ஒன்று சேர்ந்து அந்நிய நாட்டு ஆதிக்கத்தை நம் நாட்டை விட்டே விரட்ட வேண்டும் என்கிற ஒரே உயரிய லட்சியத்துடன் செயல்பட்டனர். அவர்களின் கடும் போராட்டங்களுக்கும், விடாத முயற்சிகளுக்கும் அடிபணிந்த ஆங்கிலேய அரசு 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி பாரத நாடு தங்களின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டதாக அறிவித்து, இந்த நாட்டை விட்டு வெளியேறியது. தங்களின் சொந்த சுகங்கள், செல்வங்கள் மட்டுமின்றி தங்கள் இன்னுயிரையே இந்த நாட்டின் விடுதலைக்காக அர்ப்பணித்த பல்லாயிரக்கணக்கான விடுதலைப் போராளிகளின் ரத்தத்தில் கிடைத்த நம் நாட்டின் சுதந்திரம் என்பது இன்றைய தலைமுறையில் பலரும் அறியவில்லை, அறிந்து கொள்வதிலும் ஆர்வம் காட்டுவதில்லை என்பது வருத்தத்திற்குரியது. மேலும் தற்காலத்தில் நம்மில் பலரும் இன, நிற, மத, மொழி, மாநில பிரிவினைகளை கொண்டு நமக்குள்ளாகவே சண்டையிட்டு கொள்கிறோம். நாட்டின் பல மாநிலங்களில் பிரிவினைவாத சிந்தனைகள் தலை தூக்குகின்றன.
இது போதாதென்று 1947-இல் சுதந்திரம் பெற்றது முதல் இன்று வரை இந்திய நாடு சிறந்து விளங்கக்கூடாது என்கிற ஒரே குறிக்கோளில் பல அந்நிய நாட்டு சக்திகள் நம் நாட்டிற்குள்ளாக ஊடுருவி, பலவித பிரச்சனைகளை நாள்தோறும் ஏற்படுத்தி வருகின்றன.
நூற்றாண்டுகளுக்கு முன்பு எப்படி நமது முன்னோர்கள் தங்களிடம் இருக்கின்ற பேதங்களை மறந்து நாட்டின் சுதந்திரம் மட்டுமே பிரதானம் என்கிற கொள்கையோடு இந்திய நாட்டின் விடுதலைக்காக பாடுபட்டார்களோ, அதேபோன்று தற்காலத்தில் நாம் ஒவ்வொருவரும் நமக்குள்ளாக இருக்கின்ற பிரிவினைகளை மறந்து, நம் நாடு உலகில் தலைசிறந்த நாடாக செழித்து விளங்க வேண்டும் என்கிற உன்னத நோக்கத்திற்காக நமது உடல் ,பொருள், ஆவி என அனைத்தையும் பயன்படுத்த வேண்டும். “நாடு சிறந்தால் நாம் அனைவருமே சிறப்போம்” என்பதை நினைவுருத்தி, இந்த சுதந்திர தின உரையை நிறைவு செய்து கொள்கிறேன். நன்றி.